தொடரும் 144 தடை உத்தரவை மீறி ஆளுநருக்கு எதிரான போராட்டம் நடத்த காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதில் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இச்சூழலில் இப்போராட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று தலைமைச்செயலாளரிடம் அதிமுக மனு தந்துள்ளது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும், அவரை திரும்பப்பெற வலியுறுத்தியும் புதுவை மாநில காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 8-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை முன்புறமும், பின்புறமும் தடுப்புகள் அமைத்து முழுமையாக அடைத்துள்ளனர்.
தர்ணா போராட்டத்தை விளக்கி காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்தை நேற்று (ஜன. 03) இரவு முதல் தொடங்கியுள்ளனர்.
தற்போது காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய ஆதரவு கட்சியான திமுக தொடர்ந்து விலகல் போக்கைதான் கடைப்பிடித்துவருகிறது. அத்துடன் ஆளும்கட்சியையும், முதல்வர், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. தற்போது தர்ணா போராட்டத்தை விளக்கும் நிகழ்வுகளிலும் திமுக பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது.
இச்சூழலில் ஆளுநர் மாளிகை முன்பு 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.
இதுபற்றி ஆட்சியர் வட்டாரங்களில் விசாரித்தபோது, "புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதே புதுவை ஆட்சியர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். கரோனா பரவலை தடுக்க அரசு அலுவலகங்கள், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை தலைமை செயலகம், ஆட்சியர் அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர் உள்ளிட்ட இடங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையின்படி போராட்டம், தர்ணா உள்ளிட்டவைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும்வரை நீடிக்கிறது" என்று தெரிவித்தனர்.
போராட்டம் நடத்தினால் அதில் பங்கேற்கும் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுவை அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் இன்று (ஜன. 04) தலைமை செயலாளர் அஸ்வினிகுமாரை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"புதுவை மாநிலம் கரோனா தொற்றிலிருந்து படிப்படியாக இயல்பு நிலையை எட்டி வருகிறது. புதுவை மாநில மக்களின் நலன் காக்க வேண்டிய முதல்வர், கரோனா அதிகரிக்க ஒரு காரணியாக இருந்து வருகிறார். சட்ட ஒழுங்கு பிரச்சினையை கிளப்பி தனக்கு சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஏற்கெனவே தடையை மீறி ஆளுநர் மாளிகை முன்பு நடத்திய போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதை மக்கள் நன்கு அறிவர்.
தற்போது 4 ஆண்டு செயல்படாத தனது அரசின் தோல்வியை மறைக்க ஆளுநரை மாற்றக்கோரி வரும் 8-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. கரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அனுமதியின்றி முதல்வர் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்நேரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கும் வண்ணம் முதல்வரின் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.