ஜல்லிக்கட்டு சிறப்புச் சட்டம் கோரி போராடிய 179 பேர் மீதான 8 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்த சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டுமென போராட்டம் நடந்தது. இதில், அலங்காநல்லூர், செல்லூர், பெருங்குடி, திலகர் திடல் போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்பு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு தற்போது குற்றப்பத்திரிகை வழங்கி விசாரணையில் உள்ள 179 பேர் மீதான 8 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்கு முறியடிப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கம்பூர் செல்வராஜ், குமரன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகமெங்கும் தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகமெங்கும் மக்கள் போராடினார்கள்.
மதுரையிலும் அலங்காநல்லூர், செல்லூர், தமுக்கம், பெருங்குடி உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் தீவிரமாகப் போராடினார்கள்.
2017 - ஜனவரி 23-ம் தேதியில் ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெறுவதற்காக மக்களின் உறுதிமிக்க போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றி நிறைவேற்றியது.
ஜனவரி 23-ம் தேதியன்று சிறப்புச்சட்டம் இயற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என உறுதியுடன் போராடிய மக்களை அலங்காநல்லூர், செல்லூர், தமுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறை தடியடி மற்றும் தாக்குதல் நடத்தி கைது செய்தது.
ஜனவரி 23-ம் தேதி மாலை தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு சிறப்புச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. சட்டப்பேரவையில் அன்று முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வோம் எனக் கூறிவந்தார்.
ஆனால் அதன்பின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடிக்கு அரசு மாற்றியது.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்த மதுரை சிபிசிஐடி காவல்துறை தற்போது அலங்காநல்லூரில் 64 பேர், செல்லூர் முதல் வழக்கு 30 பேர், செல்லூர் 2-வது வழக்கு 24 பேர், பெருங்குடி முதல் வழக்கு 17 பேர், பெருங்குடி மற்றொரு வழக்கு 17 பேர், திலகர் திடலில் 3 வழக்குகள் என ஒவ்வொன்றிலும் 9 பேர் என 8 வழக்குகளில் மொத்தம் 179 பேருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க வேண்டும் என எதற்கும் அஞ்சாமல் உறுதியுடனும், வீரத்துடனும் போராடி சிறப்புச் சட்டம் இயற்றவைத்த போராளிகள், இன்று மூன்றாண்டுகளாக தமிழக அரசால் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
போராட்டம் நடத்திய மக்கள் மீது வழக்கு போடமாட்டோம் என சட்டசபையில் கூறிவந்தவர்கள் தற்போது ஜல்லிக்கட்டு நாயகன் என பட்டத்துடன் வலம் வந்து கொண்டுள்ளனர்.
உண்மையில் தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு உரிமைக்காக உறுதியுடன் போராடியவர்களுக்கு விருது கொடுத்து அரசு சிறப்பு செய்யவேண்டும். ஆனால் அவர்களை வழக்கு போட்டு அரசு நீதிமன்றத்துக்கு அலைய வைப்பது அறமானதோ, நீதியானதோ, நேர்மையானதோ அல்ல.
எனவே மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இக்காலத்தில் ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடியவர்கள் மீதான போராட்ட வழக்குகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.