தமிழகம்

தென்காசியில் 4,38,775 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.117 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சர் தொடங்கிவைத்தார்

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கக்கன் நகரில் உள்ள காயிதேமில்லத் புது நியாயவிலைக் கடையில் கூட்டுறவுத்துறை மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2500 ரொக்கப் பணம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

விழாவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார். அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பொங்கல் பரிசுத் தொகுப்வை வழங்கி பேசியதாவது:

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பு ஆகியவை ஒரு துணிப்பையுடன் சேர்த்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் 2.06 கோடிக்கும் மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணையிட்டது.

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மொத்தம் 648 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக் கடைகள் மூலம் பச்சரிசி 438.7 டன், சர்க்கரை 438.7 டன், உலர் திராட்சை 8,776 கிலோ, முந்திரி 8,776 கிலோ, ஏலக்காய் 2194 கிலோ மற்றும் ரூ.2500 ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மொத்தம் 4,38,775 பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.117.01 கோடி மதிப்பில் வழங்கப்பட உள்ளது.

பரிசுத் தொகுப்பை கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தனிமனித இடைவெளியுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் என தினமும் 200 பேருக்கு மிகாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் நியாயவிலைக் கடைக்குச் சென்று சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்டு தைப்பொங்கல் திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, திருநெல்வேலி கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அழகிரி, திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் கோகிலா முருகேசன், கூட்டுறவு சங்களின் துணைப் பதிவாளர்கள் முத்துசாமி, குருசாமி, வீரபாண்டி, கூட்டுறவு பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர்கண்ணன், மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT