பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை 2 மாதங்களில் மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை நுகர்வோர் அமைப்பின் செயலாளர் என்.லோகு ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘‘கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. எந்த ஆட்டோவிலும் மீட்டர் இல்லை. அதனால் 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.50 வசூலிக்கின்றனர். சென்னையில் 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.25 மட்டும் வசூலிக்கப்படுகிறது. சென்னை போலவே கோவையிலும் ஆட்டோக் களுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அத்துடன் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை தமிழகம் முழுவதும் மாற்றி அமைக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். பொதுமக்கள் புகார் கூற வசதியாக ஆட்டோக்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை எழுதிவைக்க வேண்டும். ஆட்டோவில் அதன் உரிமையாளர், ஓட்டுநரின் புகைப்படம், முகவரி இடம்பெற வேண்டும்’’ என்பது உட்பட 8 விதிமுறைகளை வகுத்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் திருத்தி அமைக்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை தண்டிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘‘பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு 2 மாதங்களில் மாற்றி அமைக்க வேண்டும். இதை அரசுக்கு கடைசி வாய்ப்பாகத் தருகிறோம். எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைப்பது என்பது குறித்து பிறகு முடிவு செய்யலாம்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.