பெருங்குடி மண்டலம், உள்ளகரம் - புழுதிவாக்கத்தில் பாதாள சாக்கடை பணிகுளறுபடிகளால் பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் விபத்துகள் சகஜமாகி வருகிறது. மூத்த பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் மூலம் பணிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் 168, 169-ம் வார்டுகளுக்கு உட்பட்ட உள்ளகரம்-புழுதிவாக்கம் பகுதியில், பாதாள சாக்கடைபணிகள் 2011-ம் ஆண்டு ரூ.34.01 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு 2019-ம் ஆண்டு நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக 79,524 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்துமனுக்கள் பெறப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன. லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து புழுதிவாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் குழாய்கள் பதித்தபிறகு இணைப்புகள் சரிவர பரிசோதிக்கப்படவில்லை. மேலே கான்கிரீட் தளம் அமைக்கப்படவில்லை. குழாய்களும் தரமற்றவையாக இருக்கின்றன. தற்போது, கிட்டத்தட்ட அனைத்துமுக்கிய தெருக்கள், சாலைகளிலும் பள்ளங்கள் தோண்டி இணைப்புகளை பரிசோதிக்கிறார்கள். பின்னர் அந்தப்பள்ளங்கள் சரிவர மூடப்படுவதில்லை. சமீபத்திய மழையில் அந்தப் பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரண்டு சக்கர வாகனங்களில் கூட பயணிக்க முடியாத நிலை உள்ளது.
ஏற்கெனவே அதிகாரிகளின்அலட்சியத்தால், புழுதிவாக்கம் ஏரியில் கழிவுநீர் திறந்துவிடப்பட்டு மாசடைந்துவிட்டது. இந்நிலையில் சாலையில் உள்ள கால்வாயில் கழிவுநீரை எடுத்து விடும் அவலம் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்து வருகிறது. தெருக்களில் லாரிகள்மூலம் கழிவுநீர் அள்ளப்படுவதால், பாதாள சாக்கடைத் திட்டம் தோல்வியடைந்து விட்டதாகவே மக்கள் கருதுகின்றனர்.
இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம்கேட்டால், அடைப்புகளை சரி செய்வதாகவும், கேபிள் தோண்டியவர்கள் சேதப்படுத்தி விட்டதாகவும் சொல்கின்றனர்.இது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.உள்ளகரம் - புழுதிவாக்கத்தில் நடக்கும்பணிகளை பொறியாளர்கள் கொண்ட உயரதிகாரிகள் குழு மூலம் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.