கட்சியை வளர்க்க கிராமம் கிராமமாக செல்வேன் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளராக நியமிக்கப்பட்ட ரூபி மனோகரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் காஞ்சி வடக்கு மாவட்டத் தலைவராக இருந்த ரூபி ஆர்.மனோகரன் மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தாம்பரத்தில் உள்ள காமராஜர் மற்றும் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை வளர்க்க கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அந்த நேரத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை விளக்குவேன். காமராஜரின் மேல் பற்று கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். மத்திய அரசு வேளாண் சட்டம் மூலம் விவசாயிகளூக்கு மிக பெரிய துரோகம் இழைத்துள்ளது.
பாஜக மற்றும் அதிமுகவால் 10 ஆண்டுகளாக தமிழகம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. புதிய தொழில்களைத் தொடங்க முடியவில்லை.
கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டபோது போதிய நிதி உதவி செய்யாமல் இருந்த அதிமுக அரசு தற்போது தேர்தல் வருவதால் ரூ.2,500 கொடுக்கிறார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக மக்கள் அவர்களைப் புறக்கணிப்பார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.