‘‘திமுகவுடன் காங்., கூட்டணி சேர்ந்ததில் இருந்தே அதிமுகவுக்கு வெற்றி தான்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எஸ்பி ரோஹித்நாதன், எம்எல்ஏ நாகராஜன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மகேஷ்துரை ஆகியோர் மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், பாம்கோ நிறுவனத் தலைவர் நாகராஜன், ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுநாச்சியார், மருதுபாண்டியர், கண்ணதாசன் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டி மரியாதை செய்தது ஜெயலலிதா ஆட்சியில் தான். ‘அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்ததால் திமுக கூட்டணி வெற்றி பெறும்,’ என ப.சிதம்பரம் கூறி வருகிறார். ஆனால் திமுகவுடன் காங்., கூட்டணி சேர்ந்ததில் இருந்தே அதிமுக வெற்றி பெற்று வருகிறது, என்று கூறினார்.
தொடர்ந்து ‘அதிமுக மூன்றாக உடையும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்,’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்வது வழக்கம் தான். இதற்கு முதல்வர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்,’ என்று கூறினார்.