ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவிடத்தை பார் வையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் ராமேசுவரத்தில் உள்ள பேக் கரும்பில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு 27.7.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
நினைவிடத்தின் நுழைவுப் பகுதி யில் கலாம் வீணை வாசித்தவாறு அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப் படங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள 4 காட்சிக் கூடங்களில் கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நினைவிடத்தை திறந்ததிலிருந்து சுமார் 82 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்று லாப்பயணிகள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் 17 அன்று கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கலாமின் தேசிய நினைவிடம் மூடப்பட்டது.
9 மாதங்களுக்குப் பிறகு, கடந்த டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டதுடன், கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ராமேசுவரம் அக்னிக் தீர்த்தக் கடற்கரை மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கலாம் நினைவிடத்தை பார்வையிட மட்டும் இன்னும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.
இதனால் ராமேசுவரம் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியாமலும், வாசலில் நின்றபடி மணி மண்டபக் கட்டிடத்தை மட்டும் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே அப்துல்கலாம் நினை விடத்தை பார்வையிட மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்க வேண்டும் என்று ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.