செங்கல்பட்டு மாவட்டம், கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். அருகில் செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ். 
தமிழகம்

செங்கை, காஞ்சி மாவட்ட நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணிகளை அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கொத்திமங்கலம் எம்.ஜி.ஆர். நகர்ரேஷன் கடையில் பொங்கல் பரிசுதொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமையில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளர் ஆர். கே.சந்திரசேகரன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான ப.லோகநாதன், செங்கல்பட்டு சரக துணைப் பதிவாளர் வை.சந்திரசேகரன், செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் சீதா, காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.ஆறுமுகம், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் மொத்தம் 841 ரேஷன் கடைகள் மூலம் 3,86,146 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்புக்காக ரூ.102.97கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 386 மெட்ரிக் டன் பச்சரிசி, 386 டன் சர்க்கரை, 3,86,146 கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ரூ.2,500 என 3,86,156 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 102.97 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகள் அனைத்துரேஷன் கடைகளிலும் வழங்கப்படவுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 635 ரேஷன் கடைகள் மூலம் 3,58,213 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்குவதற்காக ரூ.95.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் 358 மெட்ரிக் டன் பச்சரிசி, 358 டன் சர்க்கரை, 3,58,213 கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ரூ.2,500 என மொத்தம் 3,58,213 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 95.52 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகள் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படவுள்ளன.

இரண்டு மாவட்டங்களிலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன்கடைகளில் ஜன.4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மதியம் 1:30 மணி முதல்மாலை 5:30 மணி வரையிலும்வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு 13-ம் தேதி வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தெரு, பகுதிவாரியாக பரிசு தொகுப்பு வழங்கப்படும் விவரங்கள் அந்தந்த கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும்.

இவற்றை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பின்பு தான் வழங்கப்படும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் 044 -27238225 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT