மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையக் கூடாது என்பதில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் மீனவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
மீனவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் குந்துக்காலில் ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் ரூ. 70 கோடியிலும், மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் ரூ.128 கோடியிலும் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது. சீனியப்பா தர்ஹாவில் தூண்டில் மீன்பிடி வளைவு அமைக்கும் பணி நடைபெறுகிறது.
ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்குவதற்கு 348 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் முதல் கட்டமாக 63 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ராமேசுவரத்தில் 26 பேருக்கும், மண்டபத்தில் 2 பேருக்கும் படகு கள் வழங்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையக் கூடாது என்பதில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது.
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும்போதும், தமிழக அரசு மத்திய அரசு மூலம் இலங்கை அரசுடன் போராடி மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளது.
இது மக்கள் அரசு. அம்மா வழியில் நடக்கும் அரசு. தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்கள் உங்களுக்குக் கிடைக்க அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.