தமிழகத்தில் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை காலதாமதமின்றி வழங்கி, இந்தாண்டுக்குள் திட்ட இலக்கை முடிக்க வேண்டும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரிசி பெற தகுதியுள்ள குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2011-12 முதல் தற்போது வரை ரூ.8 ஆயிரத்து 667 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒரு கோடியே 43 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்ட செயல்பாடுகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடையே அவர் பேசும்போது “மாவட்டங்களுக்கு அனுப்பும் பொருட்களை பயனாளிகளுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். மாவட்டங்களில் பொருட்கள் வைக்கப்படும் கிடங்குகளின் பாதுகாப்பு, சேவை மையங்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். திட்டத்தின் முழு இலக்கையும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்” என்றார்.