தமிழகம்

புறநகர் ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுக்க புதிய இணைப்புக் குழு: தமிழக, ரயில்வே போலீஸார், ஆர்பிஎப் இணைந்து சோதனை

செய்திப்பிரிவு

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் போன்ற புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குற்றங்களை தடுக்க தமிழக போலீஸார், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினரைக் கொண்ட இணைப்பு குழு ஏற்படுத்தப்பட உள்ளது.

பல்லாவரம் ரயில் நிலையம் அருகே சில நாட்களுக்கு முன்பு பெண்ணிடம் ஒரு கும்பல் தவறாக நடக்க முயன்றது. இதை தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்துவிட்டு கும்பல் தப்பிவிட்டது. பல்லாவரம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் ரயில் பயணிகள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, புறநகர் ரயில் நிலையங்களில் குற்றங்களை தடுப்பது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த சில மாதங்களாக ரயில் நிலையங்களில் கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரை நியமித்து கண்காணித்து வருகிறோம். சில ரயில் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடும் குற்றவாளிகளை பிடிப்பதில் பிரச்சினை இருக்கிறது. இதுதொடர்பாக மாநில போலீஸார், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினோம்.

இதையடுத்து, ஒரு இணைப்புக் குழு ஏற்படுத்தி அதன்மூலம் ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த இணைப்புக் குழுவில் அந்தந்த பகுதி போலீஸார், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் இருப்பார்கள்.

குற்றங்கள் அதிகம் நடக்கும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் போன்ற ரயில் நிலையங்களில் முதலில் இந்த இணைப்புக் குழு ஏற்படுத்தப்படும். பிறகு, தேவைக்கு ஏற்ப படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT