சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் திமுக எம்எல்ஏ கே.ஆர்.பெரிய கருப்பனுக்கும், அதிமுக மாவட்ட ஊராட்சித் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மினி கிளினிக் திறப்பு விழா பாதியில் நிறுத்தப்பட்டது.
திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.சேவல்பட்டி, ஆத்தங்குடி, வேலங்குடி, மேலவண்ணாயிருப்பு, முசுண்டம்பட்டி ஆகிய 5 இடங்களில் இன்று மினி கிளினிக் திறக்கப்பட்டன.
எஸ்.புதூர் அருகே முசுண்டம்பட்டியில் நடந்த திறப்பு விழாவில் கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், திமுக எம்எல்ஏ கே.ஆர்.பெரிய கருப்பன், முன்னாள் எம்.பி. பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பேசுகையில், ‘உலகம்பட்டி- மட்டாங்காடு சாலை எங்களது முயற்சியில் கொண்டு வரப்பட்டது’ என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட கே.ஆர்.பெரியகருப்பன் இச்சாலை தன்னுடைய முயற்சி கொண்டு வரப்பட்டது என்று கூறினார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அதிமுக, திமுக நிர்வாகிகளிடமும் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களைப் போலீஸார் சமரசப்படுத்தினர். இச்சம்பவத்தால் அமைச்சர் பாஸ்கரன் விழாவில் பேசாமல், பாதியில் சென்றார். இதையடுத்து விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.