தனியார் மென்பொருள் நிறுவனம் தன்னை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்துள்ளார்கள் என பெண் மென்பொறியாளர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு மீண்டும் பணி வழங்கவும், பணி நீக்க காலத்தில் 50% சம்பளம் வழங்கவும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்துக்கு தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரியை சேர்ந்த லதா கோவிந்தசாமி என்பவர் 1995-ம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் பதவிக்கு தேவையான தகுதிகளை மேம்படுத்திக்கொள்ளாததால், 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணி ஒதுக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
2017 மே 2-ம் தேதி மயக்கம் மற்றும் டிஹைட்ரேட் ஏற்பட்டதன் காரணமாக விடுப்பு எடுத்த நிலையில், மருத்துவ விடுப்பு குறித்த சான்றிதழ்களை சமர்ப்பித்தும், அவற்றை ஏற்காமல், லதாவை பணிநீக்கம் செய்து, ஜூன் மாதம் டிசிஎஸ் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தன்னை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட கோரியும், பணியிலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு 18% வட்டியுடன் ஊதியத்தை வழங்க கோரியும் சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் லதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி என்.வேங்கடவரதன், லதா தாக்கல் செய்த ஆவண ஆதாரங்களை பார்க்கும்போது அவர் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, பணி நீக்க உத்தரவு ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து சம்பள பாக்கியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும் எனவும், லதாவை 3 மாதத்தில் மீண்டும் பணியில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளார்.