தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நடைமுறையின்படி அறிவிக்கப்படுவார் என, பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலிலிருந்து அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என, அக்கட்சியின் தமிழக தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, சென்னை, புதுப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு, "முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கென சில நெறிமுறைகளும் நடைமுறைகளும் இருக்கின்றன. அதனால் தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என சொல்லியிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டுதான் இங்கு நிற்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் எந்த குழப்பமும் வேண்டாம்.
எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி குறித்து இறுதி முடிவு குறித்து 4-5 நாட்களில் எடுக்கப்படும். முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் தயக்கம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நடைமுறையின்படிதான் அறிவிக்கப்படும். அதனால், இவரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என யாரும் சொல்லவில்லை. தொண்டர்கள் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. பாஜக - அதிமுக தலைவர்கள் இதனை பேசிக்கொள்வார்கள். நடுவில் நாம் பேசினால்தான் இந்த குழப்பம் வரும்" என தெரிவித்தார்.