‘எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் 10 நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்றும், தவறினால் பதவியை பறிப்பது குறித்து சட்டம் கொண்டு வரப்படும் எனவும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் விடியல் மீட்பு பயணம் மேற்கொண் டுள்ள மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டத்துக்கு நேற்று வந்தார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நேற்று காலை விடியல் மீட்பு பயணத்தை தொடங்கிய ஸ்டாலினுக்கு கீழரத வீதியில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை நகருக்கு சென்று மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருக்கு முஸ்லிம் பிரமுகர்களும், ஜெயின் சங்கத்தினரும் வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு, விலங்கியம்மன் கோயில் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அதன்பிறகு, சிதம்பரத்தில் இருந்து கீரப்பாளையம் வழியாக புவனகிரி சென்ற அவர் பொதுமக்களை சந்தித்தார். மேலும், சேத்தியாத்தோப்பு வழியாக குமாரக்குடி சென்று செங்கல் சூளையை பார்வையிட்டார்.
அதன்பிறகு, விருத்தாசலம் மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளுக்கு ஸ்டாலின் சென்றார். அப்போது அவர் பேசியதாவது: விலைவாசி உயர்வு, அதிமுகவினருக்கு மட்டுமே முதியோர் உதவித் தொகை என்ற நிலையில்தான் தமிழகம் உள்ளது. மக்கள் குறைகளைப் பற்றி எடுத்துரைக்க வாய்ப்பில்லை.
‘நமக்கு நாமே’ பயணத்தின் மூலம் மக்களைச் சந்தித்த அனுபவத்தின் அடிப்படையில் பலவற்றை உணர்ந்து அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். முதல்கட்டமாக எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் 10 தினங்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்றும் தவறினால் பதவியை பறிப்பது குறித்தும் சட்டம் கொண்டு வரப்படும். இது குறித்து திமுக தலைவரிடம் எடுத்துரைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.