கொடைக்கானலில் நள்ளிரவு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட சுற்று லாப் பயணிகள் நேற்று காலை முதல் குவிந்ததால் அதிக கூட்டம் காணப்பட்டது.
இந்த ஆண்டு தமிழக அரசு தடையால் புத்தாண்டுக் கொண்டாட் டங்கள் நடைபெறவில்லை. இருந்தபோதும் நேற்று காலை முதலே கொடைக்கானலுக்கு வாகனங் களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், மோயர் பாய்ண்ட், தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
இயற்கை எழிலை ரசித்தபடி புத்தாண்டைக் கொண்டாடினர். ஏரிச்சாலையைச் சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டபோதிலும், சைக்கிள் ஓட்டியும், குதிரை சவாரி செய்தும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை, இந்த வாரம் புத்தாண்டு என வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து மூன்று நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறுவியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று மிதமான காற்றுடன் பகலிலேயே லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் ரம்மியான இயற்கை எழிலைச் சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். பகலில் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியசும், இரவில் குறைந்த பட்சமாக 11 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவியது.
கோடை சீசன் காலத்தில் கரோனா கட்டுப்பாடுகளால் கொடைக்கானலுக்கு மக்கள் வந்துசெல்ல முடியாத நிலையில், தற்போது ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாட்களில் கொடைக் கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது அதிகரித்து வருகிறது.