சூளகிரி அருகே பசுமைக்குடிலில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா மலர் தோட்டம். 
தமிழகம்

உருமாறிய கரோனா தொற்று பரவலால் ஐரோப்பிய நாடுகளுக்கு மலர் ஏற்றுமதி பாதிப்பு

எஸ்.கே.ரமேஷ்

ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஓசூரில் இருந்து அந்நாடுகளுக்கு ரோஜா உள்ளிட்ட மலர் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் விவசாயிகள் மலர்கள் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், கிரசாந்திமம் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரோஜா, கிரசாந்திமம் மலர்கள் ரூ.10 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால், நிகழாண்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களுக்கான ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தைக்கு மட்டுமே மலர்களை விற்பனைக்கு அனுப்பி வருவதாக மலர் சாகுபடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கின் போது, மலர் விவசாயிகள் பலர் தோட்டங்களைப் பராமரிக்க முடியாமல் அழித்துவிட்டனர். இதனால் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், கிரசாந்திமம் உள்ளிட்ட மலர்கள் உற்பத்தி 60 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு கொய் மலர்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதேபோல் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடந்த விழாக்களில் பங்கேற்க மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் ரோஜா உள்ளிட்ட மலர்கள் ஏற்றுமதி முடங்கியது.

தற்போது உள்ளூர் சந்தைக்கு மட்டுமே ரோஜா உள்ளிட்ட மலர்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ரோஜா ஒன்று ரூ.7 முதல் ரூ.8 வரையும், ஜெர்பரா ரூ.6-க்கும், கிரசாந்திமம் கட்டு ரூ.250-க்கும் விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் மலர்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் புதிதாக மலர் தோட்டங்கள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இவற்றில் இம்மாதம் 25-ம் தேதிக்கு பின்னரே மலர்கள் மலரத் தொடங்கும். அதன்பின்னர் உற்பத்தி அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT