தமிழகம்

கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தில் படகுசேவை ரத்து: கரைப்பகுதியில் சிலை வைத்து தமிழ் ஆர்வலர்கள் மரியாதை

எல்.மோகன்

கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தில் பலத்த காற்றால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் கரைப்பகுதியிலேயே திருவள்ளுவர் சிலை வைத்து தமிழ் ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே பாறையில் கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.

இந்த சிலை நிறுவப்பட்ட தினத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று தமிழ் அறிஞர்கள் படகில் திருள்ளுவர் சிலை பாறை பகுதிக்கு சென்று மரியாதை செலுத்துவார்கள்.

திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் நிறுவி இன்று 21வது ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. இதை கொண்டாடுவதத்காக கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் தமிழ் ஆர்வலர்கள் படகில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குமரி கடல் பகுதியில் வீசிய கடும் சூறைகாற்றால் கடல் சீற்றமும் நிலவியது.

இதனால் பாதுகாப்பு கருதி இன்று கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஏமாற்றம் அடைந்த தமிழ் ஆர்வலர்கள் மரத்திலால் ஆன சிறிய திருவள்ளுவர் சிலையை படகு இல்லத்தின் கரைப்பகுதியில் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழ் ஆர்வலர்கள் பத்மநாபன், தமிழ் குளவி, காவடியூர் சிவநாராயண பெருமாள், முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் நகராட்சி தலைவி மீனாதேவ், பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, பாலஜனாதிபதி, மற்றும் திரளானோர் மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தில் சிலை பகுதிக்கு படகில் செல்ல முடியாமல் கரைப்பகுதியிலே நின்று மரியாதை செலுத்தியது இந்த ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT