புத்தாண்டை கொண்டாட நள்ளிரவில் கடற்கரை சாலையில் குவிந்த மக்கள். 
தமிழகம்

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு இடையே புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்கள், தேவாலயங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு  

அ.முன்னடியான்

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு இடையே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், புதுச்சேரியில் மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி புத்தாண்டை கொண்டாடுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஓட்டல், தங்கும் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

புத்தாண்டையொட்டி விதிமீறல்கள் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரி நகருக்குள் நுழையும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

இதன் காரணமாக, அனைத்து சந்திப்புகளிலும் நேற்று (டிச. 31) காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போலீஸாரின் கடும் கெடுபிடி காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடற்கரைக்குச் செல்ல 10 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி ஒயிட் டவுன், கடற்கரை சாலைகளில் போலீஸார் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்தனர். பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

நள்ளிரவு 12 மணி ஆனதும் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். உரக்க குரலில் 'ஹேப்பி நியூ இயர்' என கத்தியபடி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

இளைஞர் பட்டாளங்கள் நடனமாடியும், 'கேக்' மற்றும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதனால் கடற்கரை சாலை வாழ்த்து மழையால் நனைந்தது.

அதே நேரத்தில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை சாலையில் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் ஆயிரம் பேர் என 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே சீகல்ஸ் உணவகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மண்டலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் பேரிகார்டு மூலம் அதன் நுழைவு பகுதி அடைக்கப்பட்டது. அப்போது சிலர் அவ்வழியாக செல்ல முயற்சித்தனர். போலீஸார் அவர்களைத் தடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

புத்தாண்டு பிறப்பையொட்டி புதுச்சேரியில் உள்ள ஜென்மராக்கினி மாதா பேராலயம், தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை, வில்லியனூர் லூர்து அன்னை உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதே போல் இன்று (ஜன. 01) புத்தாண்டையொட்டி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. புதுச்சேரி ஸ்ரீ மணக்குளவிநாயகர் கோயிலில் தங்கக் கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

பக்தர்கள் வருகையையொட்டி கோயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் நாராயணசாமியும் புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கினார்.

காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், கதிர்காமம் முருகன் கோயில், பாகூர் மூலநாத சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது. புத்தாண்டையொட்டி புதுச்சேரி சுற்றுலாத்தலங்களும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டன. இதனால் அண்டை மாநிலங்களில் புத்தாண்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி அரசால் அனுமதி அளிக்கப்பட்டதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

SCROLL FOR NEXT