"தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடக்க உள்ளது. 2.5 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் தயார் நிலையில் உள்ளோம், விரைவில் அந்தப்பணி தொடங்கும்" என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககம் வளாகத்தில் அமைச்சர் விஜய்பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒத்திகையில் என்ன முடிவெடுத்துள்ளீர்கள்?
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடக்க உள்ளது. தடுப்பூசி போடுவதற்காக 47,200 மையங்கள் தயாராகி வருகிறது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். நாளை ஒத்திகை தொடங்க உள்ளோம். கூடிய விரைவில் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்படும் என்பதை தமிழக முதல்வர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒத்திகையில் என்ன செய்வீர்கள்?
ஒத்திகை ஏன் முக்கியம் என்றால் தடுப்பூசி போடுவது என்பது எளிதான ஒன்று அல்ல. பாதுகாப்பாக, கவனமாக, துல்லியமாக மத்திய அரசு, சுகாதாரத்துறை, உலக சுகாதாரத்துறை வழிகாட்டுதலோடு செய்யவேண்டிய ஒன்று. இது ஒரு புது வகையான வைரஸ் அதனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியைக் கவனமாக பண்ணனும். அதனால் ஒத்திகை மிகவும் அவசியம். அதனால் சரியான திட்டமிடலுடன் கூடிய பணியை நாளை தொடங்க உள்ளோம்.
எத்தனை பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது?
21,170 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். இவர்கள் செவிலியர்கள் அல்ல. அனைத்து சுகாதாரத்துறைப் பணியாளர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்த வழிகாட்டுதலுடன் பயிற்சி அளிக்கிறோம். வகுப்பெடுக்கிறோம். 2.5 கோடி மக்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடவுள்ளோம், அதற்கான தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் பாதுகாத்து வைப்பதற்கானக் கட்டமைப்பை பொது சுகாதாரத்துறை, தமிழ்நாடு மருத்துவக்கழகம் இணைந்து உருவாக்கியுள்ளோம்.
மொத்தம் எத்தனை இடங்களில் ஒத்திகை நடக்கிறது?
11 இடங்கள் என இருந்தது. தற்போது கூடுதலாக 6 இடங்கள் கூட்டப்பட்டு 17 இடங்களில் போடப்படுகிறது. முதலில் சென்னையில் ஆரம்பிக்கிறோம். 11 இடங்களுடன் கூடுதலாக 6 இடங்கள் சேர்த்து 17 இடங்களில் போடுகிறோம்.
வலது கை அல்லது இடது கையில் போடுவீர்களா?
மனித உடலில் இரு பக்கமும் ஒரே மாதிரி உள்ளதுதான். அதற்கான எந்த நடைமுறையும் சொல்லப்படவில்லை. யூசிஜி தடுப்பூசி இடது கையில் போடுவார்கள். ஆனால் இந்த தடுப்பூசிக்கு எந்த பிரச்சினையும் இல்லை இரண்டு பக்கத்தில் எதில் வேண்டுமானாலும் போடலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.