தமிழகம்

வாரண்டி காலத்துக்குள் பழுதான கணினியைச் சரிசெய்து தராத நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

க.சக்திவேல்

வாரண்டி காலத்துக்குள் பழுதான கணினியை வாடிக்கையாளருக்குச் சரிசெய்து தராத விற்பனை நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துக் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாகக் கோவையைச் சேர்ந்த சிவபாலன், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கணினி விற்பனைக் கடையில் கடந்த 2017 டிசம்பர் 18-ம் தேதி ரூ.1.02 லட்சம் செலுத்தி எச்.பி. நிறுவனக் கணினியை வாங்கினேன். அதற்கு 3 ஆண்டுகள் வாரண்டி அளித்தனர்.

இந்நிலையில், அந்தக் கணினி சரிவர வேலை செய்யவில்லை. இதையடுத்து, 2019 நவம்பர் 12-ம் தேதி எச்.பி நிறுவனத்துக்குப் புகார் அனுப்பினேன். இதையடுத்து, என்னிடமிருந்த கணினியைப் பழுது நீக்குவதற்காகப் பெற்றுச் சென்றனர். பின்னர், ஒரு மாதம் ஆகியும் பழுது நீக்கப்படவில்லை, கணினியும் திருப்பி அளிக்கப்படவில்லை. கேட்டால் முறையான பதிலும் இல்லை. எனவே, கணினியை வாங்க நான் செலுத்திய தொகையைத் திருப்பி அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கணினி விற்பனை நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "கணினியின் வாரண்டி காலத்துக்குள் பழுதை நீக்கித் தராதது சேவை குறைபாடாகும்.

எனவே, மனுதாரர் கணினி வாங்குவதற்காகச் செலுத்திய ரூ.1.02 லட்சத்தை விற்பனை நிறுவனம், தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.40 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT