புத்தாண்டு தினத்தை ஒட்டி அண்ணா மற்றும் கருணாநிதி சமாதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார், அவருடன் திமுக முக்கிய தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு கரோனா தொற்று 8 மாத காலம் நாட்டையே முடக்கிபோட்டுவிட்டது. இந்த ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாள், பொங்கல் திருநாளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை திமுக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். அவர் மறைந்தப்பின் அவரது சமாதிக்கு முக்கிய தினங்களில் செல்வதை திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை ஒட்டி அண்ணா, கருணாநிதி சமாதிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.ராசா உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் வந்தனர், ஸ்டாலின் மனைவி துர்காவும் அவருடன் வந்திருந்தார். கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.