கோப்புப் படம் 
தமிழகம்

மணமக்களின் வசிப்பிட பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமண பதிவுக்கான வசதி

செய்திப்பிரிவு

மணமக்களின் நிரந்தர வசிப்பிட பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துகொள்ளும் வகையில் திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின்படி, தமிழகத்தில் திருமணம் நடைபெறும் இடத்தின் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய இயலும் என்ற நிலை இருந்தது. இதை எளிமைப்படுத்தும் நோக்கில் 2020-21 பதிவுத் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் கே.சி.வீரமணி, ‘‘மணமகன் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யும் புதிய வசதியை ஏற்படுத்தும் விதமாக திருமணங்கள் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்” என்று அறிவித்தார்.

அதை செயல்படுத்தும் விதமாக திருமணபதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம், 2009-ன் படி அனைத்து தரப்பினருக்கான திருமணங்களும் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை அனைவரும் பின்பற்றும் விதமாக, திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமணப்பதிவை மேற்கொள்ளலாம். இந்தவசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT