தமிழகத்தில் பாஜக எழுச்சி பெறுவது திமுகவுக்கு பிடிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக எழுச்சி பெற்று வருவது திமுகவுக்கு பிடிக்கவில்லை. கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு பின்னணியில் திமுக உள்ளது. விவசாயிகள் பிரச்சினை, கல்வி, கடவுள் வழிபாடு என எல்லா விஷயங்களிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
மத்திய அரசின் திட்டங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் சென்று சேர்வதால், இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. விவசாயி, தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்காகத்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதை மறைத்து இடைத்தரகர்களுக்கு ஆதரவாக திமுக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.