மலை ரயிலில் பயணிக்க உதகை ரயில் நிலையத்தில் திரண்ட பயணிகள் கூட்டம். படம்:ஆர்.டி.சிவசங்கர். 
தமிழகம்

9 மாதங்களுக்குப் பிறகு இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம்

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9 மாதங்களாக ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் இயக்கப்படவில்லை. இடையில் சில நாட்கள் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் வழக்கமான கட்டணத்துடன் மலை ரயில் இயக்கப்பட்டது.

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் இணைய தளம் வழியாக முன்பதிவு செய்தனர். இதனால் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ‘ஹவுஸ் ஃபுல்’-ஆக ரயில் வந்தடைந்தது. உதகை ரயில் நிலையத்தில் மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு, கனமழை பெய்தது. எனினும் மழையை பொருட்படுத்தாமல் மலை ரயிலில் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் நீலகிரியின் எழில்மிகு இயற்கையை கண்டு ரசித்தனர்.

சுற்றுலாப்பயணிகள் கூறும்போது, பொது முடக்கத்தால் மனச் சோர்வு அடைந்திருந்த நிலையில், மலை ரயில் பயணம் உற்சாகத்தை தந்தது. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை வனத்தின் நடுவே பயணித்தபோது புதிய அனுபவம் ஏற்பட்டது என்றனர். வரும் ஞாயிற்று இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT