கொக்கிலமேடு பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 
தமிழகம்

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேட்டில் கடல் சீற்றத்தால் மீன்வளத் துறை கட்டிடங்கள் சேதம்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சதஅலைகள் கடற்கரையை தாக்கி வருவதால் மீன் இறங்குதள கட்டிடங்கள்சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரையில் கனமழை பெய்யக்கூடும் எனசென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டுமாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கடல் காற்று பலமாக வீசி வருகிறது.

மேலும், கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சதகடல் அலைகள் கரையை தாக்கி வருகின்றன. இதனால், மீன்வளத் துறை சார்பில் கரையில் கட்டப்பட்டிருந்த மீன்இறங்குதளம், வலை உலர்த்தும் கட்டிடங்கள் கடல் அரிப்பால் சேதமடைந்தன. தொடர்ந்து கடல் அலைகள் கரையைதாக்கும்பட்சத்தில், இக்கட்டிடங்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, "சமீபத்தில் வீசிய நிவர்மற்றும் புரெவி புயல்கள் காரணமாக கொக்கிலமேடு பகுதியில் ராட்சத அலைகள் கரையை தாக்கியதில் ஏற்கெனவே மேற்கண்ட கட்டிடங்களின்அஸ்திவாரங்கள் சேதமடைந்திருந்தன.

இந்நிலையில், தற்போது மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கட்டிடங்கள் முழுவதும் கடல் நீரில் இழுத்து செல்லப்படும் நிலை உள்ளது. இதனால், மீன்பிடி படகுகளை நிறுத்த கரையில்லாமல் பாதிக்கப்படுவோம்" என்றனர்.

SCROLL FOR NEXT