தமிழகம்

மாணவியை விமானத்தில் அனுப்பிவைத்து உதவிய 4 பேருக்கு ஜெயேந்திரர் விருது வழங்கி பாராட்டு

செய்திப்பிரிவு

வேளாண் பட்டப்படிப்பு கலந்தாய்வுக்காக கோவைக்கு செல்வதற்கு பதிலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வந்து தவித்த மாணவியை விமானத்தில் ஏற்றி உரிய நேரத்தில் கோவைக்கு அனுப்பிவைத்தவர்களுக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர் விருது வழங்கி கவுரவித்தார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் சென்னபுரி பக்த ஜன சமாஜம், ஜன கல்யாண், ஸ்ரீகாஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவை சார்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 81-வது பிறந்தநாள் விழா சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நேற்று நடந்தது. இதில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு, பல்வேறு அமைப்புகளின் மரி யாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில், குறிப்பிடத்தக்க சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங் கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வேளாண் பட்டப்படிப்பு கலந்தாய்வுக்காக கோவைக்கு செல்வதற்கு பதிலாக ஒரு மாணவி தனது தாயுடன் தவறுதலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வந்துவிட்டார். பாண்டியன், எஸ்.பரமசிவம், ஜெயசங்கர் ராஜா, சரவணன் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்து அவர்கள் இருவரையும் உரிய நேரத்தில் விமானத்தில் கோவைக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் 4 பேரையும் பாராட்டி ஜெயேந்திரர் விருதுகளை வழங் கினார். 102 வயதிலும் மாண வர்களுக்கு வேத பாடம் நடத்திவரும் பரசுராம கனபாடிகள் உட்பட பல்வேறு சாதனைகளை படைத்தவர்களுக்கும் விருதுகளை வழங்கினார். விழாவில் ஜெயேந்திரர் பேசியதாவது:

நல்ல பாதைக்கு வருவதுதான் நம் வாழ்வின் முக்கிய லட்சியம். அந்த லட்சியத்தை அடைய நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். குரு அருள் இருந்தால் நம்மால் எந்த காரியத்தையும் செய்துவிட முடியும். ஈஸ்வர பக்தியைவிட குரு பக்தி முக்கியம். ஆதிசங்கரரின் வரலாற்றை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது வழியைப் பின்பற்றி நடக்க நாமும் முயற்சி செய்ய வேண்டும். அவரது உபதேசங்களைப் படித்து நல் வழிக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT