தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த என்.சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்தார். அவர் 7.12.2012-ல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவரை தற்கொலைக்குத் தூண்டியதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகரசபைத் தலைவருமான ஓ.ராஜா, பாண்டி உட்பட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை தேனி நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கை தேனி நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். ஓ.ராஜா சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிடும்போது, இந்த வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கோயில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்குத் தூண்டியதாக ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீதுள்ள வழக்கை திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு மாற்றியும், இந்த வழக்கை திண்டுக்கல் நீதிமன்றம் 4 மாதத்தில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி ஆர்.மாலா உத்தரவிட்டார்.