தமிழகம்

கடல்வாழ் உயிரின வாழ்விடங்களை பாதுகாக்க ஆய்வு தேவை: இன்று உலக பெருங்கடல்கள் தினம்

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் ஜூன் மாதம் 8ம் தேதி, 'உலக பெருங்கடல்கள் தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தினத்தின் இந்த ஆண்டு மையக்கருத்து 'பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் நம் அனைவருக்கும் அதிகாரம் உண்டு' என்பதாகும்.

கடல்களை அதன் பல்வேறு வளங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிற நமக்கு, கடல் வாழ் உயிரின வாழ்க்கைச் சூழலை மாசுபடுத்தும் முயற்சிகளைத் தடுக்கவும் அதிகாரம் இருக்கிறது என்பதே அந்த வாசகத்தில் உள்ள செய்தி.

பெருங்கடல்களில் வாழும் டால்பின்களில், இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள ஒரு டால்பின் ரகம் பற்றியும் அதைக் காப்பாற்றும் முயற்சிகள் குறித்தும் 'தி இந்து'வுடன் பகிர்ந்து கொண்டார் பிரபல கானுயிர் ஆவணப்பட இயக்குநர் சேகர் தத்தாத்ரி. இவர் சமீபத்தில் இயக்கியுள்ள திரைப்படம் ஒடிசா மாநிலத்தின் சிலிகா ஏரியில் உள்ள டால்பின்கள் குறித்ததாகும்.

அவர் கூறியதாவது: “கடல்வாழ் உயிரினங்களில் மிக முக்கியமானது டால்பின்கள். இந்தியாவில் 27 வகை டால்பின்கள் உள்ளன. பர்மாவில் உள்ள இராவதி ஏரியில், உள்ள டால்பின்கள் இராவதி டால்பின்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதே வகை டால்பின்களை ஒடிசாவின் சிலிகா ஏரியிலும் காணலாம்.

உலக அளவிலேயே வெறும் 10,000 எண்ணிக்கையில் மட்டுமே உள்ள இந்த டால்பின்கள், இந்த ஏரியில் 150 மட்டுமே உள்ளன.

ஆசியாவிலேயே மிகப் பெரிய உவர் நீர் ஏரி சிலிகா தான். கடலை ஒட்டியுள்ள இந்த ஏரியைச் சரியாகப் பாதுகாக்க முடியாததால், 1970ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரையில், இந்த ஏரியில் வண்டல் மண் சேர ஆரம்பித்தது. அதனால் கடல் நீர் உள்ளே வரும் முகத்துவாரம் அடைக்கப்பட்டுவிட்டது. இதனால், ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான இந்த உவர் நீர் ஏரி நன்னீர் ஏரியாக மாறிவிட்டது.

1.5 மீட்டர் ஆழம் உள்ள இந்த ஏரியில் வண்டல் மண் அதிகரித்ததாலும், ஆகாயத் தாமரை போன்ற களைகள் பெருகியதாலும் மேலும் ஆழம் குறைந்துவிட்டது.

இதனால், அங்கு இருந்த டால்பின்களின் வாழ்விட சூழல் மாறி, ஏராளமான டால்பின்கள் இறந்துவிட்டன. டால்பின்களைப் பாதுகாக்க 2002ம் ஆண்டில் 'சிலிகா மேம்பாட்டு ஆணையம்' பல முயற்சிகள் மேற்கொண்டது.அதன் விளைவாக அந்த ஏரியில் கடல் நீர் உள்ளே வர துவாரம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் அந்த ஏரி உவர் நீர் தன்மை கொண்டதாக மாறியது. களைகள் அகற்றப்பட்டன. கடல் நீர் உள்ளே வந்து வண்டல் மண்ணையும் அடித்துச் சென்றது. இதனால் ஏரியின் ஆழம் பழைய நிலைக்கே திரும்பியது. டால்பின்களும் பெருக ஆரம்பித்தன.

தற்போது, அந்த ஏரி சுற்றுலா மையமாக மாற்றப்பட்டுள்ளதால் 700க்கும் அதிகமான விசைப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் டால்பின்கள் காயமடைகின்றன. படகுகளிலிருந்து டீசல் கசிவதாலும் அவை பாதிப்படைகின்றன. மீன் பிடிப்புக்காகப் பல்வேறு வலைகள் பயன்படுத்தப்படுவதாலும், மீன் குஞ்சுகள் பிடிக்கப்படுவதாலும் தீனி கிடைக்காமல் டால்பின்கள் அழிகின்றன. ஏரியைச் சுற்றுலா மையமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. 30 அல்லது 40 படகுகள் பயன்படுத்தினால் சமாளிக்கலாம். ஆனால் 700 படகுகள் என்றால் அது டால்பின்களுக்கு ஆபத்தாக முடியும்.

மீன் பிடிப்பதற்கு என குறிப்பிட்ட சில வலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதி அமைத்து நடைமுறைப்படுத்தினால் டால்பின்கள் வலையில் சிக்கி இறப்பதைத் தடுக்க முடியும்.

நம் நாட்டில் கடல்சார் ஆய்வுகள் என்பது மிகவும் குறைவு. கடல்சார் உயிரின வாழ்விட சூழலை பாதுகாக்க வேண்டுமெனில், ஆழமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் கடல்சார் உயிரின வாழ்க்கைச் சூழலில் உள்ள பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் நமக்குத் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT