கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்காக கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கஉள்ளது. இதையொட்டி, கடந்த நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர்15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பெறப்பட்ட 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கரோனா பரவலை கருத்தில் கொண்டு, 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கவேண்டும் என்று, சமீபத்தில் தமிழகம் வந்த தேர்தல் ஆணைய குழுவினரிடம் அரசியல் கட்சிகள்கோரிக்கை விடுத்தன. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டாலும், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய குழுவினர் உறுதி அளித்தனர். இதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகின்றன.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:
கரோனா காலகட்டம் என்பதால் ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தற்போது உள்ள 68,324 வாக்குச்சாவடிகளை 95 ஆயிரமாக உயர்த்துவதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். முதல்கட்டமாக, அதற்கான மையங்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான மையங்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெறுவதால், தேர்தலை முன்
கூட்டியே நடத்த வாய்ப்பு இல்லை. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க 12-டி படிவம் வழங்கப்படும்.
'‘
இவ்வாறு அவர் தெரிவித்தார்.