தமிழகம்

சபரிமலை செல்லும் புதுச்சேரி பக்தர்களுக்கு கரோனா பரிசோதனைச் சான்று இலவசம்: முதல்வர் நாராயணசாமி உத்தரவு

செ.ஞானபிரகாஷ்

சபரிமலைக்குச் செல்லும் புதுச்சேரி பக்தர்கள், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாகக் கரோனா பரிசோதனை செய்து சான்று பெறலாம் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

சபரிமலைக்கு இணையம் வழியாக முன்பதிவு செய்து யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கரோனா பரிசோதனை செய்து, கரோனா தொற்றில்லை என்ற சான்றுடன் வரக் கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது.

முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் இந்தச் சான்று பெறக் காலதாமதம் ஆகிறது. ஜிப்மரில் இதற்கான கட்டணம் ரூ.2,500 ஆக உள்ளது. இதைத் தவிர்க்க அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் கரோனா பரிசோதனை செய்து, சான்று தர நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் இன்று கோரியிருந்தனர்.

இதையடுத்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாகப் பரிசோதனை செய்து சான்றிதழை விரைந்து தர, சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமாருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலைக்கு இணையம் வழியாக முன்பதிவு செய்து யாத்திரை செல்லும் புதுச்சேரி ஐயப்ப பக்தர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT