தமிழகம்

பணம் கொடுக்கிறவர்கள் எதையாவது செய்து ஜெயிக்க நினைக்கின்றனர்; நாங்கள் ஜெயித்துவிட்டு செய்ய நினைக்கிறோம்: சிவகங்கையில் கமல்ஹாசன் பேச்சு

இ.ஜெகநாதன்

‘‘பணம் கொடுக்கிறவர்கள் எதையாவது செய்து ஜெயிக்க நினைக்கின்றனர், நாங்கள் ஜெயித்துவிட்டு செய்ய நினைக்கிறோம்,’’ என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் தயாராகி விட்டீர்கள். அதை செய்து காட்டுவோம். மக்களின் ஆட்சி மலர வேண்டுமென்றால் நீங்கள் மக்கள் நிதி மய்ய்ம் கையை வலுப்படுத்த வேண்டும்.

நாங்கள் நல்ல திட்டங்களுடன், நேர்மையுடன் உங்களை அணுகுகிறோம். இந்த வார்த்தையை உபயோகிக்கக் கூட ஆட்சியாளர்கள் யோசிப்பார்கள்.

நேர்மை என்பது தான் எங்கள் பலம். அது நமது பலமாக மாற வேண்டும் என்பது தான் என் ஆசை. உங்கள் வாக்கு என்பது தான் உங்கள் உரிமை. அதை கடமை என்று நினைக்க வேண்டும், என்று கூறினார்.

தொடர்ந்து அவர் சிவகங்கையில் மகளிர் குழுவினரிடம் பேசியதாவது: இங்குள்ள பெண்களை பார்த்தால் வேலுநாச்சியார் தான் நினைவுக்கு வருகிறது. மணல் கொள்ளை, மரக்கடத்தலுக்கு நாம் அனுமதித்து வருகிறோம். அதனால் தான் பகலிலும் கொள்ளை அடித்து வருகின்றனர். இதையெல்லாம் மாற்ற முடியும்.

நாங்களும் 100 நாள் திட்டம் வைத்துள்ளோம். அது தான் ‘பிக்பாஸ்’. சிவகங்கை பெரியாறு பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் முழுமையாக திறக்க வேண்டும். தொழில் வளத்தை மேம்படுத்த வேண்டும். திறன் மையம் அமைத்து செயலாக்க எங்களை ஆதரிக்க வேண்டும்.

விவசாயத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு. எதையும் மகளிர் நினைத்தால் மாற்ற முடியும். இல்லத்தரசிகளுக்கு ஊதிய கணக்கு வைத்து அரசு கொடுக்க வேண்டும். மனித வளத்தில் அரசு முதலீடு செய்ய வேண்டும்.

ஏழ்மை தான் நம்மை கையை நீட்டச் சொல்கிறது. அதனால் மக்களை செழுமைக் கோட்டிற்கு கொண்டு வர வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டால் இதை செய்ய முடியும். பணம் கொடுக்கிறவர்கள் எதையாவது செய்து ஜெயிக்க நினைக்கின்றனர்.

ஜெயித்துவிட்டு எதையாவது செய்ய வேண்டும் நினைப்பவர்கள் நாங்கள். அன்று வெள்ளையனை வெளியேறு என்று சொன்னோம் இன்று கொள்ளையனை வெளியேறும் என்று சொல்கின்றோம். இந்த ஆட்சியில் உள்ளவர்கள் சீட்டைப் பிடித்து கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர்.

அவர்களை யாரும் தூக்கிக் கொண்டு போய் உட்கார வைக்கவில்லை. வெளியேறினால் கட்சிகாரர்களைத் தவிர யாருக்கும் வருத்தம் இல்லை. நகரங்களில் கிடைக்கும் அனைத்தும் கிராமங்களிலும் கிடைக்கும். ஊர்கூடி தேர் இழுத்தால் நாளே நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT