விரைவில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிதாக சீருடை வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் இன்று அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிட இயக்கங்களை மட்டுமே தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். திமுக ஆட்சிக்கு வர கடுகு அளவு கூட வாய்ப்பில்லை.
அதிமுக இரண்டாக உடையும் எனக்கூறி கட்சி கட்டுப்பாட்டை சீர்குலைக்க மு.க ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் உருவெடுத்துள்ளார்கள். ஒருபோதும் அதிமுக உடையாது.
பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக மு க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அதில் துளியும் உண்மையில்லை. அந்தந்த கடை ஊழியர்கள் மட்டுமே டோக்கன் வழங்கி வருகிறார்கள்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிதாக சீருடை வழங்கப்படவுள்ள நிலையில் சீருடை அணியாமல் யாரும் நியாயவிலைக் கடைகளில் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ரஜினி ஆழமாக சிந்தித்து செயல்படக் கூடியவர் என்பதால் அழகான முடிவு எடுத்து இருக்கிறார். எதிலும் நிதானமாக இருக்கக்கூடியவர். நல்ல மனம், எண்ணம் படைத்தவர் ரஜினி, தற்போது உள்ள கரோனோ காலகட்டத்தில் தனது உடல்நிலை, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரச்சாரம் செய்ய முடியாது என்பதாலும் தன்னை நம்பி வந்தவர்களை பாதிப்பில் ஆழ்த்திவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ரஜினி எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது.
திரைத்துறையில் தமிழகத்திற்காக பல்வேறு பெருமை தேடித்தந்தவர் கமல். கமல் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கலாம். அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. கமலுக்கு வராததை விட்டுவிட வேண்டும். நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆக முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.