மீனாட்சியம்மன் கோயில் சார்பில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இன்று முதல் படகுசவாரி தொடங்கப்பட்டது. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்து, அவரும் படகுசவாரி செய்து மகிழ்ச்சியடைந்தார்.
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் மிகவும் பிரச்சித்தி பெற்றது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தெப்பக்குளங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த தெப்பக்குளத்தில் கடந்த காலத்தில் படகுசவாரி விடப்பட்டது. உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப்பயணிகள் வரை படகுசவாரி சென்று மகிழ்ச்சியடைந்தனர். ஏராளமான சினிமா திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் தெப்பக்குளம் வறட்சிக்கு இலக்கானது. இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக தெப்பக்குளம் மாறியது. மழை பெய்தாலும் மழைநீரும் தெப்பக்குளத்திற்கு வருவதில்லை.
இந்நிலையில் தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பட்டது. தற்போது தெப்பக்குளத்தில் தண்ணீர் கடல் போல் நிரம்பி பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. அதனால், தெப்பக்குளத்தல் மீண்டும் படகுசவாரி விட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து இந்து தமிழ் திசையில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மீனாட்சியம்மன் கோயில் சார்பில் தெப்பக்குளத்தில் படகுசவாரி விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, படகுசவாரி தொடங்கி வைத்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன், கோயில் இணை ஆணையர் செல்லத்துறை மற்றும் அதிகாரிகளுடன் அவரும் படகில் சவாரி செய்து பயணம் செய்தார். தெப்பக்குளத்தில் மீண்டும் படகுசவாரி விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதனால், இனி முன்போல் தெப்பக்குளம் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி இதுபோல் ஆண்டுமுழுவதும் தெப்பக்குளத்தில் படகுசவாரி விட வேண்டும் என்றும், அப்படி செய்தால் மதுரை சுற்றுலாத்தலங்களில் தெப்பக்குளம் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்றும், சினிமா தியேட்டர்களைத் தவிர பெரியளவில் பொழுதுபோக்கு அம்சம் இல்லாத மதுரையில் குழந்தைகளுக்கு இந்த படகுசவாரி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என படகுசவாரி செய்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.