பிரிட்டனில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு புதிய வகைகரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, புதிய கரோனா வார்டை பார்வையிட்டார். அப்போதுசெய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரிட்டனில் இருந்து வரும் அனைவருக்கும் முதல்வர் உத்தரவுப்படி கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு 2,100 பேர் வந்துள்ளனர். அதில், 1,549 பேரை பரிசோதனை செய்ததில், 19 பேருக்கு கரோனா தொற்றுஇருந்தது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைசெய்தபோது 16 பேருக்கு தொற்றுஉறுதியானது. அவர்கள் அனைவரும் தனியாக கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது சளி மாதிரிகளும் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், கடந்த 21-ம் தேதி பிரிட்டனில் இருந்துடெல்லி வழியாக சென்னை வந்த இளைஞருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்றவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் மொத்தம் 6 பேருக்குபுதிய வகை கரோனா ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். 3 பேர் பெங்களூரு, 2 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள்.
சென்னை வந்த இளைஞருடன் விமானத்தில் அருகில் பயணித்த 15 பேரை பரிசோதனை செய்ததில், யாருக்கும் தொற்று இல்லை. அந்தஇளைஞர் சென்னை கிண்டி கிங்இன்ஸ்டிடியூட்டில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளார்.மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், மூத்த மருத்துவர்கள், மூத்த செவிலியர்கள் கொண்ட தனி மருத்துவக் குழுவை அமைத்து கண்காணித்து வருகிறோம்.
புதிய வகை கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு பொது மருத்துவமனையில் 120 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழுடன்தான் வந்துள்ளனர். ஆனாலும், அவர்களை கண்டறிந்து மீண்டும் பரிசோதனை செய்கிறோம்.
புதிய வகை கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக்கு 8ஆய்வகங்களுக்கு மத்திய அரசுஅனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பரிசோதனைக்கு அனுமதி இல்லாததால், கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகின்றன.
புதிய வகை கரோனா தொற்றின் பாதிப்பு, உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பிரிட்டனில் இளைஞர்கள் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்ததே கரோனா தொற்றுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்திலும் கடைகள், பேருந்துகளில் பலரும், குறிப்பாக இளைஞர்கள் முகக் கவசம் அணியாமல் செல்வதை காணமுடிகிறது. அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின்போது அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட திருமண மண்டபம் மூடப்படும். நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் முகக் கவசம் அணியாமல் பலர் பங்கேற்றதால், அந்த ஓட்டல் நிர்வாகத்தை எச்சரித்துள்ளோம். அரசியல் கட்சி கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரம், கோயில் திருவிழா, பிறந்தநாள் நிகழ்ச்சி, திருமணம் என 20-க்கும் மேற்பட்டோர் கூடும் அனைத்து இடங்கள், நிகழ்ச்சிகளிலும் கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். மருத்துவமனை டீன் வசந்தாமணி, சுகாதாரத் திட்ட இயக்குநர் சிவஞானம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் செல்வநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதிதாக 957 பேருக்கு தொற்று
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 596, பெண்கள் 361 என மொத்தம் 957 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 16,132 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 95,293 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 2,711 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் என நேற்று 12 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,092 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 19 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.