தமிழகம் முழுவதும் 9 மாதங்களுக்குப் பிறகு, மதுக்கடைகளுடன் இணைந்த பார்கள் திறக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளுடன் இணைந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் இயங்கி வந்தன. கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 17-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடையுடன் இணைந்த அனைத்துபார்களையும் மூடுமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவுறுத்தினார்.
தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களை திறக்க நேற்று முன்தினம் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பார்களை சுத்தம் செய்து திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று பகல் 12 மணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் திறக்கப்பட்டன. மதுபானங்களை வாங்கிக் கொண்டு பார்களுக்கு வந்தவர்கள், கைகழுவும் திரவத்தினால் கைகளை சுத்தம் செய்த பிறகு உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களது பெயர், செல்போன் எண் உள்ளிட்டவை பெறப்பட்டன. 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அமர அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர் நலச் சங்க தலைவர் அன்பரசன் கூறியபோது, ‘‘1500-க்கும் மேற்பட்ட பார்களை சுத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே, வரும் 1-ம் தேதியில் இருந்துதான் பார்கள் முழுமையாக செயல்படும். 9 மாதங்களுக்கு மேலாக பார்கள் திறக்கப்படாததால் ரூ.405 கோடி வாடகை பாக்கி தர வேண்டியுள்ளது. இதில் சிறிய தொகையை அரசு வழங்க வேண்டும்’’ என்றார்.