செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் மற்றும் புதுப்பாக்கம் கிராமங்களில், 217 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஈசா ஏரி மூலமாக 365 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக நீர்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் இந்த ஏரியின் கரைகள் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்டன. ஆனால், தூர்வாரப்படவில்லை.
இதனால் மழைக் காலங்களில் அதிகப்படியான நீரை ஏரியில் தேக்கிவைக்க முடியாமல் கரைகளின் வழியே வெளியேறும் நீர், அருகில் உள்ள வீட்டுமனைப் பகுதிகளில் வெள்ளம்போல தேங்கிவிடுகிறது.
இந்நிலையில் இந்த ஈசா ஏரியை முறையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், அதேபோல களத்தூரான் கால்வாயை சீரமைக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வீட்டுமனை விற்பனை செய்யும் ‘கிரீன் சிட்டி’ நிறுவனம் சார்பில், வேளச்சேரியைச் சேர்ந்த ஆர்.தியாகராஜூ, ஆட்சியர் ஜான்லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் மற்றும் பொதுப்பணித் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தனித்தனியாக கோரி்க்கை மனு அளித்துள்ளார்.
அதில், ‘‘எங்களது கிரீன் சிட்டி நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் பல்வேறு சர்வே எண்களில் 8.93 ஹெக்டேர் பரப்பில், முறையாக அரசு அனுமதியுடன் நகர ஊரமைப்புத் துறை இயக்குநரகத்திடம் (டிடிசிபி) அப்ரூவல் பெற்று வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறோம். இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் சிலர் எங்களுக்கு எதிராக தேவையில்லாத அவதூறு பரப்பி, தொழிலுக்கு இடையூறு செய்கின்றனர்.
உண்மையில் எங்களிடம் லஞ்சமாக ரொக்கம் அல்லது இலவச வீட்டுமனைகளை தரவேண்டும் எனக் கோரினர். அதற்கு நாங்கள் உடன்படவில்லை என்றதும் எங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்.
எனவே அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒழலூர் – புதுப்பாக்கம் ஈசா ஏரி மற்றும் களத்தூரான் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளதால், மழைக் காலங்களில் அடிக்கடி அருகில் உள்ள வீட்டு மனைகளுக்குள் நீர் புகுந்துவிடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஒழலூர் - புதுப்பாக்கம் ஈசா ஏரி மற்றும் களத்தூரான் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும், மேலும் ஏரியைத் தூர்வார தாங்கள் உதவி செய்வதாகவும் ‘கிரீன் சிட்டி’ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.