வேலூரில் மாநில வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் இணை ஆணையரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் மாநில வரித்துறை இணை ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் இயங்கி வருகின்றன. இதன் இணை ஆணையராக விமலா (42) உள்ளார். இவர் பொது நிர்வாகம், நுண்ணறிவுப் பிரிவையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இணை ஆணையர் விமலா, பரிசுப் பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இணை ஆணையர் அலுவலகத்தை இன்று (டிச.29) கண்காணித்தனர்.
அப்போது, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து உதவி ஆணையர்கள், ஆடிட்டர்கள் மற்றும் அவர்களின் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கான சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பயிற்சி நடைபெறுவது தெரியவந்தது. பயிற்சியின் முடிவில் உதவி ஆணையர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் இருந்து புத்தாண்டு பரிசுப் பணம், சால்வை, பழங்கள், இனிப்புகள், புத்தாண்டு டைரிகளையும் விமலா வாங்கியுள்ளார்.
இந்தத் தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் இணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணி வரை சோதனை நீடித்த நிலையில், இணை ஆணையரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.