பிஹார் போன்று அதிமுக எதிர்ப்பு வாக்குகளைக் குழப்பி, ரஜினியை வைத்து தங்கள் ஆதரவை வளர்த்துக் கொள்ளலாம் என பாஜக சித்து விளையாட்டை ஆடியது. இதில் ரஜினி சிக்கிக் கொள்ளாமல் தனக்குப் பிரச்சினை வரக்கூடாது என ஒதுங்கிவிட்டார். கரோனா மட்டும் அவர் முடிவுக்குக் காரணமல்ல என்று சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் டிச.31-ல் கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என அறிவித்திருந்த நிலையில், திடீரென அரசியல் கட்சி அறிவிப்பை இன்று வாபஸ் பெற்றார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
“ரஜினிகாந்த் ஹைதராபாத்துக்கு 'அண்ணாத்த' படப்பிடிப்புக்குச் சென்றபோது அங்கு படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. சென்னைக்குத் திரும்பிய அவர், தான் கட்சி ஆரம்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினி மனப்போராட்டத்தில் இருந்தார். விருப்பம் இல்லாமல் இருந்தார். அவர் கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் உறுதியாக இல்லை. இருந்தாலும் சமீபகாலத்தில் பாஜக தலைவர்கள் அவரை நிர்பந்தப்படுத்தி கட்சி ஆரம்பிக்கச் சொன்னதும், டிச.31-ல் கட்சி குறித்து அறிவிக்கப் போவதாகச் சொல்லியிருந்தார். இப்போது ஆரம்பிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
இரண்டு விஷயங்கள். ஒன்று, பாஜக தலைவர்கள் அவரை நிர்பந்தப்படுத்தி கட்சி ஆரம்பிக்கச் சொல்லி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்தார்கள். குறிப்பாக அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதக்கூடிய வாக்காளர்கள், ஆட்சி மாற்றம் என்கிற கோஷம் வைப்பதன் மூலம் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியும். அந்த எதிர்ப்பு வாக்குகளை ரஜினியின் மூலம் கவர்வதன் மூலம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற அடிப்படையில் பாஜக தலைவர்கள் யோசித்தார்கள்.
பிஹாரில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, நிதிஷ் குமார் கட்சியை எதிர்த்தது. ஆனால், எங்கெல்லாம் பாஜக போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் ஆதரித்தது. அப்படிப்பட்ட ஒரு சித்து விளையாட்டுக்காக பாஜக, ரஜினியைப் பலிகடாவாக்க நினைத்தது. தற்போது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று சொல்லிவிட்டார். இதற்குக் காரணம் கரோனா மட்டும் இல்லை.
இரண்டாவது விஷயம், இன்றைக்கு அகில இந்திய அளவில் மத்தியில் ஆளக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனேகமாக எந்தக் கட்சியும் இல்லை. அனைத்துக் கட்சிகளும் விலகிவிட்டன. பிஹாரில் நிதிஷ் குமார் நிர்பந்தம் காரணமாக முதல்வர் பதவியை ஏற்றேன் என்று சொல்லியிருக்கிறார். கேரளாவில் மற்ற மாநிலங்களில் பாஜக செல்வாக்கு குறைந்து வருகிறது.
வரலாறு காணாத அகில இந்திய அளவில் விவசாயிகள் போராட்டத்தால் மத்திய அரசின் நோக்கம் வெளிப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு எதிர்ப்பு இருக்கும் இந்தப் பின்னணியில், ஒருவேளை அரசியலுக்கு வந்து இவர்கள் பேச்சைக் கேட்டு அரசியல் கட்சி ஆரம்பித்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்கிற அந்த அச்சமும் சேர்ந்து ரஜினி இன்றைய தினம் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இது பாஜகவின் சித்து விளையாட்டில் மிகப்பெரிய தோல்வி என்று சொல்வேன்”.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.