தமிழகம்

அரசியலுக்கு வரமுடியவில்லை என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு பேரதிர்ச்சி தருகிறது: ரஜினி மக்கள் மன்ற நெல்லை மாநகர துணைச் செயலாளர் கருத்து

அ.அருள்தாசன்

கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வரமுடியவில்லை என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு பேரதிர்ச்சியாக இருப்பதாக திருநெல்வேலி மாநகர ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் எம். வீரமணிகண்டன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகரில் மொத்தமுள்ள 450 வாக்கு சாவடிகளில் 250-ல் கமிட்டிகளை அமைத்து முடித்திருக்கிறோம். இதுபோல் திருநெல்வெலி, தென்காசி மாவட்டங்களில் 2950 வாக்கு சாவடிகளில் 60 சதவிகிதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டன.

அரசியல் கட்சி தொடங்குமுன் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கமிட்டிகளை அமைத்து முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் இரவு பகலாக பணிகளில் ஈடுபட்டிருந்தோம். இந்நேரத்தில்தான் தலைவரிடமிருந்து வந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது.

இதை மனதால் ஏற்க முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. இப்படி ஒரு தலைவர் எந்த தொண்டனுக்கும் அமையக்கூடாது.

1996-ல் இருந்தே தலைவர் கட்சியை தொடங்குவார் என்று என்னைப்போன்ற லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்திருந்தோம். அவரும் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை சொல்லவில்லை.

திரைப்படங்களிலும், பேட்டிகளிலும், தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் செயல் என்று எப்போதும் மேலே கையை காட்டிவிட்டு சென்றுவிடுவார்.

அதனால் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் திடீரென்று தலைவர் அறிவித்துள்ளதை மனதால் ஏற்க முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. இப்படி ஒரு தலைவர் எந்த தொண்டனுக்கும் அமையக்கூடாது என்று கவலை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT