ரஜினியின் முடிவை முழு மனதுடன் ஆதரிக்கிறேன் என்று அர்ஜுன மூர்த்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31-ம் தேதி தனது கட்சி தொடக்க நாளை அறிவிப்பதாக இருந்தார் ரஜினி. தான் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்திருந்தார் ரஜினி. 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத்தில் இருந்தபோது, அர்ஜுனமூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் இருவரும் கட்சித் தொடர்பான பணிகளைக் கவனித்து வந்தார்கள்.
ஆனால், ஹைதராபாத்தில் ரஜினிக்கு திடீரென்று ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் பல்வேறு விஷயங்களை அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார் ரஜினி. அதில் அர்ஜுனமூர்த்திக்கு தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு தொடர்பாக பலரும் அர்ஜுனமூர்த்தியின் கருத்தைத் தெரிவித்துக் கொள்ள ஆர்வமாய் இருந்தார்கள். ஏனென்றால் அவர் பாஜக கட்சியிலிருந்து விலகி ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைந்திருந்தார். தற்போது ரஜினியின் இந்த அறிவிப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அர்ஜுனமூர்த்தி கூறியிருப்பதாவது:
"ரஜினியின் மனம் எவ்வளவு கடுமையான உளைச்சலில் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவரது இந்த முடிவை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்"
இவ்வாறு அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.