ரஜினியின் முடிவை அதிமுக வரவேற்கிறது. அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் ரஜினிகாந்த். அவர் தொடர்ந்து அதிமுக ஆட்சி வருவதற்கு ஆதரவளிப்பார் என்று முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்வர் ராஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
“ரஜினியின் முடிவை அதிமுக வரவேற்கிறது. ஏனென்றால் அவரது உடல்நலம் முக்கியம். அதிமுக தலைவர்கள் அவரை நீண்ட நாள் வாழவேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது முதல்வர், துணை முதல்வர் இருவரும் அவர் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்கிற செய்தியை அவருக்கு அனுப்பி வைத்தார்கள்.
ரஜினிகாந்த் உடல் நலத்தோடு நீண்டகாலம் வாழவேண்டும் என விரும்புகிற கட்சி அதிமுக. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார் என்பதற்கான சான்று ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
கோவிட் காலத்தில், ஊரடங்கு நேரத்தில் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. அப்போது திடீரென்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதற்கு கடுமையான ஆட்சேபத்தை ரஜினி தெரிவித்தார். “இப்படியெல்லாம் நீங்கள் நடந்துகொண்டால் மீண்டும் ஆட்சிக்கு வருவது மிக மிக கடினம் ஆகிவிடும்” என்று சொன்னார்.
அப்படியென்றால், நீங்கள் சரியாக ஆட்சி செய்து வருகிறீர்கள். இப்படி சிறு சிறு தவறு செய்யாமல் இருந்தால் நீங்கள்தான் ஆட்சிக்கு வருவீர்கள். இப்படி ஆட்சிக்கு வருவதை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர் அறிவுரை சொன்னதைப் போலவே நான் அதைப் பார்க்கிறேன்.
எனவே, அதிமுக ஆட்சி தொடரவேண்டும் எனவும், அதிமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என அவர் விரும்புவதாகவும் நான் பார்க்கிறேன். ஆகவே, அவர் ஆசீர்வாதமும், அவரது தொண்டர்களின் ஆசிர்வாதமும் அதிமுகவுக்குத் தொடர்ந்து கிடைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு ரஜினி ஆதரவளிப்பார் என்று நான் நம்புகிறேன். திமுக எதிர்ப்பு வாக்குகள் நிச்சயம் அதிமுகவுக்குத்தான் கிடைக்கும்”.
இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.