அம்மா மினி கிளினிக் திட்டத்தில் சென்னையில் சுமார் 6,000 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை, நிவர் மற்றும் புரெவி புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (டிச. 28) அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை, நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சிகளின் சாலை சீரமைப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உத்தரவிட்டார்.
மேலும், அம்மா மினி கிளினிக் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டிச.28 வரை சென்னையில் 38 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுநாள்வரை 5,864 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.