புதுச்சேரியில் இன்று புதிதாக 42 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 29) தெரிவித்திருப்பதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,589 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 28 பேருக்கும், காரைக்காலில் 9 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 42 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்த 64 வயது முதியவர், அரங்கனூர் இந்திரா நகரைச் சேர்ந்த 40 வயது ஆண் நபர் என 2 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவே உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 158 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 205 பேரும் என மொத்தம் 363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 74 (97.38 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 398 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 36 ஆயிரத்து 47 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் தினமும் 40-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்படுவதும் மற்றும் இறப்பு எண்ணிக்கை கூடுவதும் இருந்து வருகிறது.
எனவே, அடுத்தடுத்து வருகின்ற புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது பொதுமக்கள் விழிப்போடு இருப்பதோடு, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டுமென புதுச்சேரி சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.