நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு நடத்த திறந்த வெளி ஜீப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். 
தமிழகம்

பொங்கல் பரிசுத் திட்டம் குறித்து ஸ்டாலின் பொய்யான அறிக்கை: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

கி.பார்த்திபன்

பொங்கல் பரிசுத் திட்டம் குறித்து ஸ்டாலின் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருதினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று (டிச. 29) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி என்னுடைய ஆட்சிக்காலத்திலும் நாமக்கல் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை அறிந்து பொங்கல் 2,500 ரூபாய் சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அறிவித்தேன்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் நிறைவேறி விட்டால் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு சூழ்ச்சி செய்து நேற்றைய தினமே பொய்யான அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செய்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வீடு, வீடாக சென்று வழங்குவதாக ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.

அதிமுகவை பொறுத்தவரை கடந்த ஆண்டு குடும்ப அட்டைக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்திற்கு சென்ற கட்சிதான் திமுக.

மக்களுக்கு நல்லது செய்வது திமுகவுக்கு பிடிக்காது. மக்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT