இந்திய தேசிய காங்கிரசின் 136-வது ஆண்டு நிறுவன நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு 150 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, செல்லக்குமார் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். படம்: க.பரத் 
தமிழகம்

திமுக கூட்டணி வெற்றிக்காக எந்த தியாகத்துக்கும் தயார்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக எந்த தியாகத்துக்கும் காங்கிரஸ் தயார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு விழா தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை நடந்தது. 150 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றிவைத்து சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, எம்.பி.க்கள் செல்லக்குமார், ஜெயக்குமார், எஸ்.சி. பிரிவுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

அதிமுக - பாஜக கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. மதச்சார்பின்மை என்ற கொள்கையில் உறுதியுடன் உள்ள கட்சிகள் ஒரே நேர்கோட்டில் இணைந்துள்ளன.

திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக எந்த தியாகத்துக்கும் காங்கிரஸ் தயாராக உள்ளது. தியாகம் செய்வது காங்கிரஸ் கட்சியின் மரபு. நாட்டுக்காக சிறைக்கு சென்று தியாகம் செய்த காங்கிரஸ் கட்சி, நாட்டுக்காக இப்போதும் தியாகம் செய்யும். ஆட்சியில் பங்கு கேட்கும் முடிவில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. அதுபற்றி தேர்தலுக்கு பிறகு யோசிப்போம்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, ஆன்மிகவாதி. முதல்வராக வர மாட்டேன் என்று அறிவித்த ஒருவர் கட்சி தொடங்கினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எனவே, ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT