தமிழகம்

மின் இணைப்புக்காக செலுத்தப்பட்ட வைப்புத் தொகை ரூ.16 லட்சத்தை மனுதாரருக்கு திருப்பித் தர வேண்டும்: மின் குறை தீர்ப்பாளர் உத்தரவு

செய்திப்பிரிவு

மின் இணைப்பு பெற வசூலிக்கப்பட்ட வைப்புத் தொகை ரூ.16 லட்சத்தை மனுதாரருக்கு திருப்பிவழங்குமாறு மின்சார வாரியத்துக்கு மின் குறைதீர்ப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த எருமையூரைச் சேர்ந்த சங்கர் என்பவர், மின் குறைதீர்ப்பாளரிடம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:

எனது பெயரில் உள்ள 2 மின் இணைப்புகளையும், வேலாயுதம் என்பவரது பெயரில் உள்ள 2 மின் இணைப்புகளையும் ஒன்றாக்கி உயரழுத்த மின் இணைப்பாக மாற்றினால், மின் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.

அதை நம்பி உயர் அழுத்த மின் இணைப்புக்காக மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2018 நவ. 3-ம் தேதி விண்ணப்பித்தேன். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, கடந்த 2019 மே 21-ம் தேதி மின்வாரியம் வழங்கிய கடிதத்தில் வைப்புத் தொகையாக ரூ.16 லட்சம் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தொகையை அதே மாதம் 24-ம் தேதி செலுத்திவிட்டேன். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால், மின்வாரிய மேற்பார்வை பொறியாளரிடம் முறையீடு செய்தேன்.

அப்போது, எனது விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகி விட்டதால், மின்வாரிய அதிகாரிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்றும், விண்ணப்பத்தை ரத்து செய்தால் ரூ.16 லட்சத்தை திருப்பிக் கொடுப்பதாகவும் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.இதை ஏற்று எனது விண்ணப்பத்தை ரத்து செய்தேன். ஆனால், பணத்தைஅதிகாரிகள் திருப்பி அளிக்கவில்லை. எனவே, வட்டியுடன் பணத்தைத் திருப்பி தர வேண்டும் அல்லது மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த மின் குறைதீர்ப்பாளர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

மனுதாரரின் இரு இணைப்புகளை தவிர, மற்றொருவர் பெயரில் உள்ள இரு இணைப்புகளையும் ஒன்றாக சேர்த்து, உயரழுத்த இணைப்பு பெற சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஏற்றது தொடக்கத்திலேயே செய்யப்பட்ட தவறு. மேலும், மின் இணைப்பு வழங்கஎந்த பணியையும், மின்வாரியபொறியாளர்கள் மேற்கொள்ளவில்லை. எனவே, விதிகளின்படி பிணை வைப்புத் தொகையை திருப்பி அளிக்க இயலாது என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.

அத்துடன், மின் இணைப்பு கோரும் வளாகம், மேய்க்கால் புறம்போக்கு என அறிந்த நிலையில் விண்ணப்பத்தை பதிவு செய்து பதிவுக் கட்டணம், பிணை வைப்புத் தொகையை செலுத்தக் கோரியது மின்வாரியத்தின் தவறு. எனவே, மனுதாரர் செலுத்திய வைப்புத் தொகை ரூ.16 லட்சத்தை மின்வாரியம் அவருக்கு திருப்பி வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT