தாம்பரம் அருகே அகரம்தென் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலையம். 
தமிழகம்

பழுதடைந்த நிலையில் 163 துணை சுகாதார நிலையங்கள்: தங்கி பணிபுரிய செவிலியர்கள் அச்சம்

செய்திப்பிரிவு

செங்கை மாவட்டத்தில் உள்ள 163 துணை சுகாதார நிலையங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அங்கு தங்குவதற்கு செவிலியர்கள் அஞ்சுவதால், விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 27 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 163 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. இந்த துணைசுகாதார நிலையங்களில், தலா ஒரு கிராமசுகாதார செவிலியர் பணிபுரிகிறார். அவர் அங்கேயே தங்கி பணிபுரியும் வகையில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அங்கு பெரும்பாலானோர் தங்குவதில்லை. பெரும்பாலான கட்டிடங்கள் சிதிலமடைந்து, மோசமான நிலையில் உள்ளதே இதற்கு காரணம். சில பகுதிகளில், பயன்படுத்தாத கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன.

இந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 163 துணை சுகாதார நிலையங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் பாழடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், கிராம மக்கள், அடிப்படை மருத்துவ வசதிக்கு கூட வழியில்லாமல், தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர்.

எனவே, பழுதடைந்த துணை சுகாதாரநிலைய பழைய கட்டிடடங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் இடித்து அகற்றிவிட்டு, புதியதாக துணை சுகாதார நிலையம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கிராம சுகாதார செவிலியர்கள் சிலர் கூறும்போது, "கிராம சுகாதார செவிலியர்களாக பெண்கள் மட்டும்தான் பணி செய்கின்றனர். இதனால், நாங்கள் தங்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லை.

மேலும், இந்த கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இங்கு தங்குவதற்காக எங்கள் சம்பளத்தில் மாதாமாதம் வாடகை பிடித்தம் செய்கின்றனர். எனவே, பழுதான துணை சுகாதார நிலைய கட்டிடங்களை இடித்துஅகற்றிவிட்டு, புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மினி கிளினிக் தொடங்க துணை சுகாதார நிலையத்தை சீரமைத்தும் பயன்படுத்தலாம்" என்றனர்.

SCROLL FOR NEXT