கடந்த மே 29-ம் தேதி பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் அழுக்குச் சாமி, தம்பதிகளான பிரபாகரன் - கவிப்பிரியா, சிறுமி ஜெயஸ்ரீ ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த வெடி விபத்து நடந்த செய்தி அந்த ஊர் முழுவதும் பரவியபோது, பள்ளி முடிந்து விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற சில மாணவர்கள் உயிரிழந்தவர்கள் மீட்கப்படுவதை நேரில் பார்த்துள்ளனர். அதில் மிக முக்கியமான இரண்டு சிறுவர்கள் விவின் (9), விஷ்ணு (11).
எல்லோரையும் போலத்தான் இருவரும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிந்துள்ளது அதில் இறந்தவர்கள் தங்கள் பெற்றோர் என்று. இந்த இரண்டு சிறுவர்களும் பிரபாகரன் - கவிப்பிரியா தம்பதியின் குழந்தைகள்.
கிழக்கே வெடி வெடிச்சுருச் சுன்னு எல்லாரும் சொன்னாங்க. அதனால பள்ளிக்கூடத்துலேர்ந்து நேரா போய் பாத்தேன். அப்போதான் அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்கனு தெரிஞ்சுது (அதற்கு மேல் ஏதும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறான்) 9 வயது சிறுவன் விவின். அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறான்.
பெயின்டரான பிரபாகரன் எதற்கு பட்டாசு தயாரிக்கும் இடத்துக்குச் சென்றார் எனக் கேட்டபோது, ’’எனக்கு கால்ல அடி பட்டிருந்துச்சு. அப்பாவும் நானும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தோம். அதுக்குள்ள வீட்டை பூட்டிட்டு அம்மா வேலைக்குப் போயிட்டாங்க. அம்மாகிட்ட சாவி வாங்க அப்பா போனார். ஆனா, திரும்பி வரவே இல்ல’’ என விஷ்ணுவின் குரல் தழுதழுக்கிறது. இந்த சிறுவன் 6-ம் வகுப்பு படிக்கிறான்.
இருவரும் தற்போது பாட்டி சரஸ்வதி, தாத்தா பரதக்குமார் கண்காணிப்பில் உள்ளனர். சரஸ்வதி பேசும்போது, ’’எங்க பூர்வீகம் கேரளா. ஆனா நாங்க வால்பாறை, வாழைத்தோட்டத் திலே இருந்தோம். 15 வருஷத்துக்கு முன்னே அங்கலக்குறிச்சிக்கு வந்து இந்த வாடகை வீட்டில் இருக்கோம்.
விபத்து முடிஞ்சு 15 நாள் ஆகியும் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்க முடியலை. எங்களுக்குப் பெறகு இந்த ரெண்டு பசங்களையும் யார் பாத்துக்குவாங்கன்னு தெரியாமத் தவிக்கிறோம். விபத்து எப்படி நடந்துச்சுன்னு விசாரிக்க வந்தாங்களே தவிர, அதுக்கு பெறகு எந்த அதிகாரியும் வரலை. தினமும் ராத்திரில ரெண்டு பசங்களும் தூங்காம எந்திரிச்சு உக்காந்து அழும்போது தைரியம் சொல்லக்கூட முடியலை’’ என அழுதுகொண்டே பேச்சை நிறுத்தி விட்டார்.
வீட்டில் வைத்து வெடி தயாரித்தது சட்ட விரோதம்தான். ஆனால் உரிமையாளர் யாரோ ஒருவர். அவரிடம் வேலை பார்த்த 3 உயிர்கள் பரிதாபமாக இறந்துள்ளன. பாதுகாப்பின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பது அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும், அதிகாரி களுக்கும் தெரிந்திருந்தும் அவர்கள் யாரும் அதை தடுக்கவே இல்லை. குறைந்தபட்சம் கரிசனத்துக்காகக் கூட அவர்கள் இந்தச் சிறுவர்களை வந்து பார்க்கவில்லை என்கின்றனர் அருகில் உள்ளவர்கள்.
விபத்தில் இறந்த சிறுமி ஜெயஸ்ரீயின் பெற்றோர், சார் ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மகளை இழந்த பெற்றோரின் கோரிக்கைக்கே செவி சாய்க்காத அதிகாரிகள், பெற்றோரை இழந்த சிறுவர்களின் பேச்சை கேட்கவா போகிறார்கள் எனக் குமுறுகின் றனர் அங்குள்ள மக்கள்.
வயதான பாட்டி- தாத்தாவின் அரவணைப்பைத் தாண்டி, வேறெதுவும் இல்லாத இந்த இரண்டு சிறுவர்களுக்கு நிரந்தரமான கல்வி, வாழ்வாதார உதவிகளை கொடுக்க வேண்டும். தாய் தந்தை இறந்ததை நேரில் பார்த்து மனதளவில் பலவீனமடைந்துள்ளதால் அவர்கள் இருவருக்கும் மனநல ஆலோசனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதையும் தாண்டி, அரசு என்பது எந்திரமாக இல்லாமல், இரக்கம் கொண்ட மக்களுக்கான அமைப்பாக இருக்க வேண்டும். இவை மட்டுமே அந்த சிறுவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை மறக்கச் செய்யும் என்கின்றனர் அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள்.